Published on Oct 3, 2024
Current Affairs
வெள்ளிக் கோளிற்கான இந்தியாவின் முதல் பயணம்
வெள்ளிக் கோளிற்கான இந்தியாவின் முதல் பயணம்
  • 2028 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோ இலக்கு நிர்ணயித்துள்ள வெள்ளிக் கோளிற்கான இந்தியாவின் முதல் ஆய்வுப் பயணத்திற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது 2013 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட்ட செவ்வாய் கிரக சுற்றுக் கல ஆய்வுக் கலத்திற்குப் பிறகு ஏவப்பட்டவுள்ள இந்திய நாட்டின் இரண்டாவது கிரகங்களுக்கு இடையிலான ஆய்வுக் கலம் இதுவாகும். இது வெள்ளிக் கோளின் மேற்பரப்பு மற்றும் தரைப்பகுதி, அதன் வளிமண்டலம், அதன் அயனி மண்டலம் மற்றும் சூரியனுடனான அதன் தொடர்பு ஆகியவற்றை நன்கு ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நிறை, அடர்த்தி மற்றும் அளவு ஆகியவற்றில் புவியை ஒத்துள்ளதால் வெள்ளிக் கோளானது பொதுவாக பூமியின் இரட்டைக் கோள் என்று அழைக்கப்படுகிறது. எனவே, வெள்ளிக் கோளை ஆய்வு செய்வது, பூமியின் பரிணாமத்தைப் பற்றிய பல தகவல்களை அறிவியலாளர்களுக்கு வழங்கும். குறிப்பிடத்தக்க வகையில், வெள்ளிக் கோளின் வரலாற்றில் ஒரு கட்டத்தில் அங்கு தண்ணீர் இருந்ததாகக் கருதப்படுகிறது, ஆனால் அது தற்போது உலர்ந்த மற்றும் தூசி நிறைந்த கிரகமாக மாறியுள்ளது. இது 462 டிகிரி செல்சியஸ் மிக உயர்ந்த மேற்பரப்பு வெப்பநிலையைக் கொண்டுள்ளது, எனவே இது புதன் கோளைக் காட்டிலும் அதிக வெப்பமானது. வெள்ளிக் கோளின் வளிமண்டல அழுத்தம் பூமியை விட அதிகமாக உள்ளது. வெள்ளிக் கோளின் வளிமண்டலமானது 96.5% கார்பன் டை ஆக்சைடால் ஆனது  மற்றும் இந்தக் கிரகத்தில் சல்ப்யூரிக் அமில மேகங்கள் உள்ளன.
  • பூமியுடன் ஒப்பிடும்போது வெள்ளிக் கோள் அதன் அச்சில் மிக மெதுவாக சுழல்கிறது, எனவே வெள்ளிக் கோளின் ஒரு சுழற்சி 243 பூமி நாட்கள் நீடிக்கும்.